ஆவணி மாத சிறப்புகள்
முன்னுரை:
🪔 ஆவணி மாதம் மலையாளத்தில் சிம்ம மாதம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் தமிழ் மாத புத்தாண்டானது சித்திரை மாதம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் கேரளாவில் ஆவணி மாதம் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கும் திருமணத்திற்கும் ஆவணி மாதம் சிறப்பு என்பது நம் பெரியோர்களின் கூற்று. அத்தகைய திருமணத்தினை ஆவணிமாத சுப முகூர்த்த நாளில் நடக்க நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! மேலும், இப்பதிப்பில் ஆவணி மாதத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் என்ன என்பதையும், ஆவணி மாதத்தின் சிறப்புகள் என்ன என்பதையும் பார்ப்போம்.
ஆவணி மாத சிறப்புகள்:
🪔 ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும் என்பது ஐதீகம். ஆவணியில் எல்லா நாட்களும் மங்கல நாட்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மகிமை பொருந்திய மாதத்தில்தான் கணநாதர், கண்ணபிரான் அவதாரங்கள் நிகழ்ந்தன.
🪔 கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்கள் காவல் தெய்வத்திற்கு ஆனி, ஆடி மாதங்களில் படையல் முடித்து, ஆவணி மாதத்தில் தங்கள் தொழில்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
🪔 தமிழ் மாதங்களில் ஆவணி மாதமானது ஐந்தாவது மாதம் ஆகும். கேரளாவில் இது முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கருதப்படுகிறது. வட மொழியில் சிரவண நட்சத்திரம் என்று அழைக்கப்படும் திருவோணம் நட்சத்திரம் இருப்பதனால் இது சிராவண மாதமாகவும் கொண்டாடப்படுகிறது. இதன் பொருள் 'அனைத்து மாதங்களின் அரசன்' என்பதாகும். ஆவணி மாதத்திற்கு சிங்க மாதம் மற்றும் வேங்கை மாதம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அகத்தியர் ஆவணி மாதத்தின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை' என்கிறார்.
ஆவணி மூலம் திருவிழா:
🪔 ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தினை 'ஆனி மூலம் அரசாளும்' என்று சிறப்புடன் கூறப்படுகிறது. அதுபோல ஆவணி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்திற்கும் சிறப்புண்டு. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், நாரைக்கு முக்தி கொடுத்தல், தருமிக்குப் பொன் கொடுத்தல், பிட்டுக்காக மண் சுமத்தல், நரிகளைப் பலி கொடுத்தல், வளையல் விற்பது என மதுரை மண்ணில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகச் சொக்கநாதருக்கு மகா உற்சவம் நடைபெறும். இறைவன் மாணிக்கவாசகருக்கு குதிரைகளைக் கொண்டு வந்து ஒப்படைத்தது இம்மாதத்தின் சிறப்பாகும்.
திருவோணம் திருவிழா:
🪔 ஓணம் பண்டிகை கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற பண்டிகையாகும். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைத்தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில்தான் இளையான் குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது.
மகாபலி மன்னன்:
🪔 அரசர்களில் தலைசிறந்த மன்னன் மகாபலி, ஆவணி மாதம் சிராவண துவாதசி நாளில் வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் செய்தார். சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபமானது, விருப்பத்தை நிறைவேற்றும் அற்புத வழிபாடு என்று கூறப்படுகிறது. இந்நாளில் திருமலை திருப்பதிக்கு எழுந்தருளிய மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை செய்வார். அப்போது அங்கு ஆயிரத்தெட்டு திரிகள் கொண்ட நெய் தீபம் ஏற்றப்பட்டு அப்பகுதியே ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இதற்கு சஹஸ்ர தீபாலங்கார சேவை என்று பெயர்.
ஆவணி ஞாயிறு சூரிய வழிபாடு:
🪔 ஆவணி மாதம் மூல நட்சத்திரம் மற்றும் ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமை உட்படப் பல விரத நாட்கள் இந்த மாதத்தில் வருகிறது. மேலும் ஆவணி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களும் விரதத்தின் முக்கிய நாட்களாகக் கூறப்படுகிறது. புதிதாகத் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மங்கள கெளரி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ஆவணி மாதம் சிவனை வழிபட உகந்த நாள் என்பதால், திங்கள் மற்றும் வியாழன் ஆகியவை சைவர்களுக்கு இன்றியமையாத நாட்கள் என்று கூறுவர். ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடர்வதும் நல்லது. ஆவணி மாதத்தில் புதிய வீட்டிற்குள் நுழைந்தால், அந்த வீட்டில் நல்ல வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. இந்த மாதத்தில் திருமணம் நடந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதும் நம்பிக்கை.
முடிவுரை:
🪔 மேலே குறிப்பிட்டுள்ள பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். மகிழ்ச்சியான திருமணத்தின் ரகசியம் சரியான நபரைக் கண்டுபிடிப்பதாகும். ஆவணி மாதத்தில் திருமணம் நடந்தால் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்பது பெரியோர்களின் கூற்று. அத்தகைய திருமணத்தை நமது நித்ரா மேட்ரிமோனியில் மூலம் இலவசமாக பதிவு செய்து, உங்களுக்கான வாழ்க்கை துணையோடு ஒன்றிணையுங்கள்!!